அரசு பரிசுப் பொருட்களை விற்று ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட தோஷகானா ஊழல் வழக்கில், இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
2018 முதல் 2022-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரரும், தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான். 2022-ல் இவரது ஆட்சி கவிழ்ந்த பிறகு, இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில், தோஷகானா எனப்படும் ஊழல் வழக்கும் ஒன்று. அதாவது, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, வெளிநாட்டுத் தலைவர்களால் தனக்கு வழங்கப்பட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, அரசு கஜானாவில் சேர்க்காமல், தானே விற்று 5.25 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து, பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிராக இம்ரான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அமீர் பரூக், தாரிக் மெக்மூத் ஜஹான்கிரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பையும், தண்டனையையும் நிறுத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். இத்தகவல் அவரது வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, இம்ரான் கான் ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், இத்தீர்ப்பை முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.