ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரவு வாழ்க்கைத் திரும்பி இருக்கிறது. இதனால் அம்மாநில மக்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த காலங்களில் ”நித்திய கண்டம் பூரண ஆயுசு” என்கிற கதையாகத்தான் மக்கள் வசித்து வந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதே தெரியாது. திடீரென ஒரு கும்பல் ஆயுதங்களோடு வரும், மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்று விடும். இதில், அப்பாவி மக்கள் உயிரிழந்ததுதான் மிச்சம். அந்தளவுக்கு தீவிரவாதம் தலைவிரித்தாடியது. இதில், உச்சக்கட்டக் கொடுமை என்னவென்றால், 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த படுகொலைதான்.
ஆயுதங்களோடு வந்த இஸ்லாமிய பயங்கரவாத கும்பல், அம்மாநிலத்தில் சிறுபான்மையினரான இந்து பண்டிட்களையும், கிறிஸ்தவர்களையும் சுற்றி வளைத்தது. ஒன்று மதம் மாறுங்கள் அல்லது ஊரைக் காலி செய்துவிட்டுச் செல்லுங்கள். இல்லையென்றால் உயிரை விடுங்கள் என்று அறைகூவல் விடுத்தது. அவ்வாறு மதம் மாற மறுத்தவர்களையும், ஊரைக் காலி செய்ய மறுத்தவர்களையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தது. உயிருக்கு பயந்த மக்கள் வீடு, நிலம், சொத்து, சுகம் அத்தனையும் விட்டு விட்டு ஓடி வந்தனர். இதன் பிறகாவதுத் தீவிரவாதம் குறைந்ததா என்றால், அதுதான் இல்லை. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது அரிதிலும் அரிதானது. அதோடு, இரவு நேரங்களில் கேட்கவே வேண்டாம். மக்கள் வீட்டை விட்டே வெளியே வருவதில்லை என்பதால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படும்.
இந்த நிலை மாற அம்மாநில மக்களுக்கு 30 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. ஆம், கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இதன் பிறகு, தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இராணுவம், துணை ராணுவம், மாநில காவல்துறை என 3 பாதுகாப்புப் பிரிவினரையும் களமிறக்கியது. இதன் பிறகு, ஏராளமான தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடங்க மறுத்து திமிரியவர்கள் வேட்டையாடப்பட்டனர். இதனால், தீவிரவாதமும், தீவிரவாதிகளும் படிப்படியாகக் குறையத் தொடங்கினர். மக்களும் சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ஊரைக் காலி செய்துவிட்டுத் தப்பி ஓடி வந்த மக்களும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இதனால், 77-வது சுதந்திர தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், பகல் வாழ்க்கை மட்டுமல்லாது இரவு வாழ்க்கையும் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் இரவு நேரங்களில் பொதுவெளியில் நடமாடத் தொடங்கி இருக்கிறார்கள். இதுகுறித்து காஷ்மீரி மக்கள் கூறுகையில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கூட, பகல் நேரங்களில் கூட வீட்டை விட்டு வெளியே வரத் தயக்கமாக இருந்தது. இரவு நேரங்களில் சுத்தமாக வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. ஆனால், கடந்த சில தினங்களாக கடந்த காலங்களில் இருந்த அச்சம் முற்றிலுமாக மாறி விட்டது. இப்போதுதான் உண்மையான சுதந்திரத்தை உணர்கிறோம்” என்று உற்சாகத்துடன் பொது மக்கள் கூறுகின்றனா்.
அதேபோல, பழைய நகரத்தைச் சேர்ந்த கடைக்காரர் மக்பூல் பட் கூறுகையில், “நீண்ட காலத்திற்கு முன்பு, சூரிய அஸ்தமனத்துடன் நிலவிய பயமும், அச்சுறுத்தலும் மறைந்துவிட்டன. துப்பாக்கிகள் மற்றும் கையெறிக் குண்டுகளை ஏந்திய தீவிரவாதிகள் மற்றும் கற்களைச் சுமந்துச் செல்லும் கும்பல் கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது” என்றார். எப்படியோ பாரதப் பிரதமர் நரேந்தி மோடியால், காஷ்மீர் மக்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது எனக் கூறினாா்.