பெங்களூருவில் தான் பணியாற்றியப் பேருந்து நிலையத்திற்குச் சென்ற ரஜினிகாந்த் பணியிலிருந்த ஊழியர்களிடம் தன்னுடைய மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஜெயிலர் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இமயமலைக்குச் சென்ற ரஜினி, அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள ஆன்மீக தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்.
பின்னர் கடந்த வாரம் சென்னைத் திரும்பிய ரஜினி, ஜெயிலர் படக்குழுவினருடன் ஜெயிலர் படத்தின் வெற்றியைக் கொண்டாடினார். இந்த நிலையில், திடீரென பெங்களூருக்குச் சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள ராகவேந்திரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
பின்னர், தான் நடத்துநராகப் பணியாற்றிய ஜெயா நகரில் உள்ள பிஎம்டிசி பேருந்து நிலையத்திற்குச் சென்று அங்குப் பணியிலிருந்த ஊழியர்களைச் சந்தித்தார். இதைத்தொடர்ந்து, தன்னுடைய நடத்துநர் வாழ்க்கை குறித்தப் பழைய நினைவுகளை ஊழியர்களிடம் பகிர்ந்துகொண்டு, அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
தற்போது, திரைத்துறையில் உச்சத்தில் உள்ள ரஜினிகாந்த் தன்னுடையப் பழைய வாழ்க்கையை மறக்காமல் உள்ளதைப் பலரும் பாராட்டி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.