நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எங்கு போட்டியிட்டாலும் அங்கு அவர் தோல்வியைச் சந்திப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்ச்சித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற நொய்யல் திருவிழாவில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
33 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசு கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் பெற்றுள்ள 37 லட்சம் பேருக்கு மேலும் ரூ.200 கூடுதலாக கிடைக்கும். அதாவது ரூ.400 கிடைக்கும். இது பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்னர் எந்த ஒரு நாடும் கேஸ் விலையைக் குறைத்ததில்லை. ஆனால், பாரத பிரதமர் மோடி குறைத்துள்ளார். கடந்த தீபாவளிக்குப் பெட்ரோல், டீசல் விலை குறைத்ததுபோல, ரக்சா பந்தன் பண்டிகையின்போது கேஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அம்ருத் ரயில் நிலைங்களின் விரிவாக்கப்பணி ரூ.25 ஆயிரம் கோடியில் செய்யப்பட்டு வருகிறது.
என் மண், என் மக்கள் முதற்கட்ட யாத்திரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்தக் கட்ட யாத்திரை, செப்டம்பர் 14-ம் தேதி தென்காசியில் தொடங்குகிறது. 19-ம் தேதி கோவைக்கு வருகிறது.
தமிழகத்திற்கு, மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்குவதாக தமிழக முதலமைச்சர் பொய் பேசுகிறார். எனவே, தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கானத் திட்டங்களின் புள்ளி விவரத்தை வெள்ளை அறிக்கையாக 24 மணி நேரத்தில் தமிழக பாஜக வெளியிடும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக மீது மட்டும் பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுகிறது என சீமான் பேசியுள்ளார். அவர் கூறுவதுபோல, அதிமுகவினர் ஊழல் செய்திருந்தால், அது குறித்த ஊழல் பட்டியலை அவரே வெளியிடலாமே. எங்கள் மீது குற்றம் சொல்லும் சீமான், இதுவரை ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளாரா, இல்லையே.
சீமான் மீது எனக்கு மதிப்பு உள்ளது. ஆனால், வாய் உள்ளது என்பதற்காக சீமான் என்னவேண்டும் என்றாலும் பேசக்கூடாது.
வாரணாசித் தொகுதியில், பிரதமர் மோடி போட்டியிட்டு, இன்று அந்த தொகுதியை, வளர்ச்சி மிக்க தொகுதியாக மாற்றிவிட்டார். அதனால், பிரதமர் இங்கே நிற்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் பாஜக சொல்கிறது.
திமுகவில்தான் அதிக ஊழல்வாதிகள் உள்ளனர். அவர்களை எதிர்த்து சீமான் நிற்கட்டும். பிரதமர் ஊழல் செய்தார் என்று சொல்லமுடியுமா. நேர்மைக்கு மறுபெயர் பாரத பிரதமர் மோடி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் பாரத பிரதமர் மோடியை எதிர்த்து எதற்காக சீமான் போட்டியிட வேண்டும் என கேள்வி எழுப்பியவர், சீமான் எங்கு போட்டியிட்டாலும், அங்கு அவர் தோற்பது உறுதி என்றார்.