இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
சீனாவின் ஆய்வுக் கப்பல் வருகைக்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்திருக்கும் நிலையில், ராஜ்நாத் சிங் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த இலங்கைத் தற்போது சீனாவின் கட்டுப்பாட்டிற்குச் சென்றிருக்கிறது என்றால் மிகையல்ல. காரணம், இலங்கைக்கு அந்தளவுக்கு சீனா கடன்களை வாரி வழங்கி இருக்கிறது. இதைப் பயன்படுத்தி, இலங்கையின் ஹம்பன்தோடா துறைமுகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறி, 99 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இது வெளித்தோற்றத்துக்கு துறைமுகத்தை விரிவுபடுத்துவதாகக் கூறப்பட்டாலும், தங்களது உளவுக்கப்பலை இத்துறைமுகத்தில் நிலைநிறுத்தி இந்தியாவை உளவுப் பார்ப்பதுதான் சீனாவின் நோக்கம்.
இந்த சூழலில், இலங்கை கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து திவாலானது. அப்போது, அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் நிதியுதவி மற்றும் பொருளுதவி உட்படப் பல்வேறு வகையிலும் இந்தியா உதவிச் செய்தது. உணவுப் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சீனா மீண்டும் ஏராளமான கடன்களை இலங்கைக்கு வழங்கி, கடனை உயர்த்திக் கொண்டது. இதன் மூலம், சீனாவிடம் இலங்கை வசமாக சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, சீனா சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில் இலங்கை இருக்கிறது.
இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சீனாவின் “யுவான் வாங்-5” உளவுக் கப்பல் இலங்கையின் ஹம்பன்தோடா துறைமுகத்துக்கு வருவதாகத் தகவல் கிடைத்தது. இதற்கு, இந்தியா தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதோடு, அக்கப்பலை அனுமதிக்கக் கூடாது என்று இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனாலும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, அக்கப்பல் ஹம்பன்தோடா துறைமுகத்தில் ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு நிலைகளை அக்கப்பல் உளவுப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீர்வள ஆராய்ச்சி என்கிற பெயரில் சீனா மற்றொரு உளவுக் கப்பலை அக்டோபர் மாதம் அனுப்ப இருக்கிறது. இதற்கு அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அனுமதி அளித்திருக்கிறார். இதற்கும் இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இந்த சூழலில்தான், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இப்பயணத்தின்போது, சீனா கப்பல் வருகைக்கு, இலங்கை அதிபர் ரணிலிடம் நேரில் தனது அதிருப்தியைத் தெரிவிக்கவிருக்கிறார் ராஜ்நாத் சிங். அதோடு, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும், இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தமிழகத்தின் மண்டபம் பகுதி வரை தரைப்பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, காரைக்காலில் இருந்து கொழும்புக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்குவது நீண்டகாலமாக பரிசீலனையில் இருந்து வருகிறது. மேலும், காட்டுநாயக்கன் விமானத் தளத்தை சீரமைத்து இந்தியாவிலிருந்து யாழ்பாணத்துக்கு விமானப் போக்குவரத்து தொடங்குவதும் பரிசீலனையில் இருந்து வருகிறது. சமீபத்தில் டெல்லிக்கு வந்த இலங்கை அதிபரி ரணில் விக்ரமசிங்கே, இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
அதேபோல, இந்தியா – இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது, இலங்கை தமிழர்களுக்கு உரிமைகள் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு இன்னும் அமல்படுத்தாமல் இருப்பது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடமே ஒப்படைக்க வலியுறுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக இலங்கை அரசுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.