தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை அறிவிக்கும் சரியான செயல்முறையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31, 2023 அன்று ஏழு பொருட்களுக்கான மூன்று தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை (கியூ.சி.ஓ) சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். இந்த மூன்று தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் தரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சுரங்க அமைச்சகத்தின் முதல் தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளைக் குறிக்கின்றன.
அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகளுக்கான கியூ.சி.ஓ அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவையின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இறக்குமதிக்கு பொருத்தமான இந்திய தரநிலைகளின் (ஐ.எஸ்) கீழ் சான்றிதழைக் கட்டாயப்படுத்துகிறது. உயர் தூய்மை முதன்மை அலுமினியம், தாங்கிகளுக்கான அலுமினிய உலோகக் கலவைகள், மறுசுழற்சி செய்வதற்கான முதன்மை அலுமினிய இங்கோட்டுகள், அலுமினிய இங்கோட்கள், பில்லெட்டுகள் மற்றும் கம்பிகள் ஆகியவை இதில் அடங்கும். மீதமுள்ள இரண்டு கியூ.சி.ஓக்கள் தாமிரம் மற்றும் நிக்கல் தூளுக்கு பொருத்தமான ஐ.எஸ் தரங்களை வழங்குகின்றன.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) மற்றும் தொடர்புடைய தொழில் சங்கங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் மூன்று தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் உறுப்பு நாடுகளிடமிருந்து கருத்துக்களைக் கோருவதற்காக 60 நாள் காலத்திற்கு வரைவு கியூ.சி.ஓக்களை உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ) வலைத்தளத்தில் வெளியிடுவது, 60 நாட்களுக்குள் பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற அமைச்சகத்தின் வலைத்தளத்தில் பதிவிடுவது ஆகியவை மேற்கொள்ளப்படும்.
அதைத் தொடர்ந்து, மத்திய சுரங்கத் துறை அமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு கியூ.சி.ஓ.க்கள் இறுதி செய்யப்பட்டு, சட்டத் துறையின் பரிசீலனை செய்யப்படும்.
நாட்டில் இரும்பு அல்லாத உலோகத் துறைக்கான தரக் கட்டுப்பாட்டுச் சூழலை வலுப்படுத்த சுரங்க அமைச்சகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்காக, இரும்பு அல்லாத உலோக மதிப்பு சங்கிலியில் மேல்நிலை தயாரிப்புகள் (சுத்திகரிக்கப்பட்ட உலோகம்) மீது அதிக கியூ.சி.ஓக்களை தயாரிக்க அமைச்சகம் பி.ஐ.எஸ் உடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
தரமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும், தொழில்துறை பயனர்கள் உட்பட உள்நாட்டு நுகர்வோருக்கு தரமான தயாரிப்புகளை வழங்குவதை இந்த உத்தரவுகள் உறுதிப்படுத்த உதவுகிறது.
அலுமினிய உலோகம் மற்றும் உலோகக் கலவைகள், தாமிரம் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் தரத்தை பயனர் தொழில்துறையின் நன்மைக்காக உறுதி செய்யும். அதே நேரத்தில், கியூ.சி.ஓ.க்கள் இந்த பொருட்களில் இந்திய தயாரிப்புத் தரத்தை உலகத் தரத்திற்கு ஏற்ப உறுதி செய்வதோடு, சர்வதேச சந்தையில் ‘மேக் இன் இந்தியா’ பிராண்ட் மதிப்பை அதிகரிக்கும்.
பிரதமரின் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் நோக்கில் சுரங்க அமைச்சகத்தின் பல முன்முயற்சிகளில் கியூ.சி.ஓ அறிவிப்புகளும் ஒன்றாகும்.