முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் ஆக்கிரமிப்பு விவசாய நிலங்கள் ஆகியவற்றை உடனே அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள சீகூர் பள்ளத்தாக்கில் உள்ள மாவனல்லா, பொக்காவரம், சோலூர், மாயார் மற்றும் வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வழித்தடமாக இருந்தன.
இந்த பகுதியில் விதிமுறைகளை மீறி, ஏராளமான சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டன. இதனால், அந்த பகதியில் யானைகள் செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது. யானைகள் உணவுக்காக வழிமாறிச் செல்கின்றன என புகார் எழுந்தது.
இதனால், இந்த சுற்றுலா விடுதிகளை உடனே அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, 2010 -ம் ஆண்டு யானைகள் வழித்தடம் குறித்து, தமிழக அரசு வரைபடம் வெளியிட்டது. கூடவே, அரசாணையும் வெளியிட்டது.
இதற்கு எதிராக, சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
இதன் தொடர்ச்சியாக, 39 கட்டிடங்கள் மற்றும் 310 அறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இதனை எதிர்த்து, ஒருசில கட்டிட உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தனர்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம் 2020 -ல் யானைகள் வழித்தடம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பாதிக்கப்பட்டவர்களிடம் மனு பெற்று விசாரணை நடத்தியது.
யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்துக் கட்டிடம் மற்றும் விவசாயம் செய்து வரும் 27 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், 1991 -ம் ஆண்டு, தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின்படி, ஆக்கிரமிப்பு இடங்களை உடனே அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.