இலாகா இல்லாத தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, யார் விசாரிப்பது என்பது தொடர்பான மனு, உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தி.மு.க.வைச் சேர்ந்த இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இவரது வழக்கை விசாரித்து வந்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அவ்வழக்கை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியோ, இந்த மனுவை தன்னால் விசாரிக்க முடியாது. சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
எனவே, செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவியோ, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கின் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்யும். ஆகவே, உயர் நீதிமன்றத்தை நாடுங்கள் என்று அறிவுறுத்தினார்.
செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்பு முறையிடப்பட்டது. ஆனால், இவ்வழக்கில் இருந்து ஏற்கெனவே நீதிபதி சக்திவேல் விலகி விட்டதால், இம்மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி சுந்தர், மேற்கண்ட மனுவை யார் விசாரிப்பது என்பது தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார். ஆகவே, தலைமை நீதிபதியை நாடுங்கள் என்று அறிவுறுத்தினார்.
ஆனால், தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருப்பதால், செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது .
இந்த மனு வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதன் பிறகுதான், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தெரியவரும்.