சந்திரயான்-3 திட்டம் வெற்றிப் பெற்ற நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
திட்டமிட்டப் படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் என்ற பெருமையை ஆதித்யா எல்-1 விண்கலம் பெற்றுள்ளது.
இந்த விண்கலம் பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்ற இடத்தில் சூரியனை நோக்கிய கோணத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.
இந்த லெக்ராஞ்சியின் பாயிண்ட் என்பது சூரியனின் ஈர்ப்பு விசையும், பூமியின் ஈர்ப்பு விசையும் விலகும் புள்ளியாகும். இதற்காக இன்று ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 என்ற விண்கலமானது,125 நாட்கள் பயணித்து, அந்த லெக்ராஞ்சியன் பாயிண்டை அடையும்.
மேலும், ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகள் சூரியனின் வெப்பம், காந்தத் துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளன.
ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் சீறிப் பாய்ந்து செல்வதைப் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் நேரில் கண்டுமகிழ்ந்தனர்.