எதிர்கட்சிக் கூட்டணித் தலைவர்கள் தங்களது குடும்பத்தை வளப்படுத்த விரும்புபவர்கள், நாட்டை அல்ல என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் “என் மண் என் தேசம்” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அமிர்தக் கலச யாத்திரையைத் தொடங்கி வைத்துப் பேசிய ஜெ.பி.நட்டா, “நேற்று மும்பையில் திரண்டவர்களை நீங்கள் பார்த்தீர்களா? அவர்கள் நாட்டை வளப்படுத்த வந்தவர்கள் அல்ல, தங்களது குடும்பத்தை வளப்படுத்த விரும்பும் தலைவர்கள். சோனியா தனது மகன் ராகுல் காந்தியைப் பற்றிக் கவலைப்படுகிறார். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தற்போது அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கும் தனது மகன் தேஜஸ்வி யாதவ் பற்றிக் கவலைப்படுகிறார். மம்தா பானர்ஜி தனது மருமகன் அபிஷேக் பானர்ஜி பற்றிக் கவலைப்படுகிறார். இப்படி அவர்களது கவலை எல்லாம் தங்களது வாரிசுகளைப் பற்றியதாகவே இருக்கிறது.
ஆனால், நாங்கள் அமிர்தக் காலத்தில் இருக்கிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதுதான் எங்களது கடமை. கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட பணிகளின் மூலம், இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறது. ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, நாங்கள் ஜப்பானை விட முன்னணியில் இருக்கிறோம். அமிர்தக் கலச யாத்திரை என்பது வெறும் திட்டமல்ல. நாட்டு மக்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் வீரவணக்கம். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியாவை உருவாக்கியதற்காக நமது விஞ்ஞானிகளை பாராட்டுவதோடு, நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.