மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக, பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இலங்கை செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பயணத்தின்போது, இலங்கை அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதை பாதுகாப்புத்துறை அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை எதிர்நோக்கி இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.