மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு அபயாம்பிகை உடனுறை அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான 1500 ஆண்டுகள் பழமையான, அபயாம்பிகை சமேத மயூரநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
அம்மன் மயில் உருவில் இறைவனைப் பூஜை செய்து அருள்பெற்றதாகப் புராண வரலாறு கூறுகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்திற்கானத் திருப்பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, திருக்கோவிலின் அருகில் 123 குண்டங்களுடன், பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. யாக சாலையில், காவிரி, கங்கை, யமுனை, சிந்து உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள், யானை மீது வைத்து ஊர்வலம் கொண்டு வரப்பட்டது. சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாகத்தின் நிறைவில் பூர்ணாஹுதி செய்யப்பட்டது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டுப் பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்றது.
புனித நீர் அடங்கிய கலசங்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கோவிலைச் சுற்றி வலம்வந்து, பின்னர், திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருக்கரங்களால் தொட்டு ஆசீர்வதிக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.