எதிர்கட்சிகள் இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
இராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “இண்டியா கூட்டணி கடந்த இரண்டு நாட்களாக சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி வருகிறார்கள். நமது சனாதன தர்மத்தை இவர்கள் இழிவுபடுத்துவது முதல்முறையல்ல.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நாட்டின் வளத்தில் சிறுபான்மையினருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என பேசினார். ஆனால், ஏழைகள், பழங்குடி மக்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என பாஜக சொல்கிறது.
பிரதமர் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் சனாதனம்தான் நாட்டை ஆளும் என காங்கிரஸ் கூறி இருக்கிறது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைவிட இந்து அமைப்புகள் ஆபத்தானவை என ராகுல் காந்தி கூறி இருக்கிறார். எதிர்கட்சிகள் இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.