மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் இன்று மீன்வள கிசான் கடன் அட்டை தொடர்பான ஒருநாள் தேசிய மாநாடு நடைபெற உள்ளது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில், நாளை மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் மையத்தில் மீன்வள கிசான் கடன் அட்டை (கே.சி.சி) குறித்த ஒருநாள் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. மீன்வளத் துறையும், கால்நடை பால்வளத் துறையும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்நிகழ்ச்சியின் போது, தகுதிவாய்ந்த மீனவர்களுக்குக் கிசான் கடன் அட்டைகளை (கே.சி.சி) அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வழங்குவார். அவர்களுடன் கலந்துரையாடுவதுடன் மாநாட்டிலும் அவர் உரையாற்றுவார்.
மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நடவடிக்கைகள், உணவு, ஊட்டச்சத்து மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய ஆதாரமாகவும், 2.8 கோடி மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இத்துறை சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது.
கிசான் கடன் அட்டைத் திட்டம் 2018-19 ஆம் ஆண்டில் மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு அவர்களின் செயல்பாட்டு மூலதன தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் மத்திய அரசால் விரிவுபடுத்தப்பட்டது.
கே.சி.சி பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர் முயற்சிகளின் மூலம், நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போருக்கு இதுவரை 1.49 லட்சம் கே.சி.சி வழங்கப்பட்டுள்ளது.