FIDE உலகக் கோப்பையில் உலகெங்கும் உள்ள தலைசிறந்த செஸ் வீரர்களை தோற்கடித்து, அனைவராலும் பாராட்டப்பட்ட செஸ் வீரர் பிரக்ஞானந்தா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, 18 வயதான செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தனது பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவரது வீட்டில் சந்தித்தார்.
இதை குறித்து கல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா,” பிரதமர் என்னுடன், எனக்கு ஏற்றாற்போல் பேசினார் அது எனக்கு அவருடன் உரையாட வசதியாக இருந்தது. அவர் எனது பயிற்சி முறைகள் மற்றும் எனது போட்டிகள் பற்றி கேட்டறிந்தார் . மேலும் அவர் என்னுடைய பெற்றோர்கள் பற்றியும் விசாரித்தார். விளையாட்டில் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறினார்.
மேலும் அவர், ” சமீபத்தில் குளோபல் செஸ் லீக் போட்டியில் நாங்கள் செயல்பட்ட விதம் எங்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் விதமாக இருந்தது. இந்தியாவில் மிகவும் வலிமையான வீரர்கள் உள்ளனர். ஆகையால் நான் மிகவும் கடின உழைப்புடன் சிறப்பாக விளையாடுவது அவசியம்” என்றும் கூறியுள்ளார் இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா.