சென்னை அடுத்துள்ள புழல் சிறையில், கஞ்சா மற்றும் போதை மாத்திரை உள்ளிட்டவைகளை சப்ளைச் செய்தக் காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வந்த ஏஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து, மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
புகாரின் பேரில் அந்த நிறுவன உரிமையாளர்கள் ஆல்வின், ராபர்ட் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், ஏஆர்டி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஆல்வின் அறையில் சிறைத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில், போதை மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதனைப் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், சிறைக் காவலர் திருமலை நம்பிராஜன் என்பவர்,
கடந்த சில மாதங்களாகவே, கைதிகளுக்குப் போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக, புழல் காவல் நிலையத்தில் சிறைத்துறையினர் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார், சிறை காவலர் திருமலை நம்பிராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புழல் சிறையில், சட்டத்தை பாதுகாக்கும் காவலர் ஒருவர், சட்டவிரோதமாகப் போதை மாத்திரை, கஞ்சா சப்ளைச் செய்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.