நமது வேதங்கள் அறிவின் கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது என்றும், இதில், ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிக அளவு உரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, நமது பண்டைய நூல்களில் ஜாதி அமைப்பு உள்ளதாகச் சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அப்படி ஏதும் இல்லை என்பதே உண்மை.
பொய் பிரச்சாரம் செய்பவர்கள் வேதங்கள் படித்து தெளிந்தால், இப்படித் தவறாகப் பேச மாட்டார்கள். எனவே, தவறாகப் பேசுவபவர்கள் நிச்சயம் வேதங்களைப் படிக்கவேண்டும். அப்போதுதான் உண்மையை உணர முடியும்.
இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை என்பது, வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. நமது வேதங்கள் அறிவின் கலங்கரை விளக்கமாக போற்றப்படுகிறது.
அதுமட்டுமல்ல, சட்டம் மற்றும் கலாசாரத்தையும் வழிநடத்துகிறது என்பதே நிஜம். வேதங்கள், இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் பாராம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
சமத்துவம் மற்றும் சாஸ்திரங்களின் ஒரு பகுதியாகவே வேதங்கள் திகழ்ந்து வருகிறது. ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிக அளவு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதை நாம் பெருமையாகக் கொண்டாட வேண்டும் என்றார்.