அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று, மாநகர மேயர் அறிவித்திருப்பதாக துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சீண்டி இருக்கிறார்.
அமெரிக்காவின் கென்டக்கியின் லூயில்வில்லி மாநகரில் இந்து கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவில் ரிஷிகேஷில் உள்ள பார்மார்த் நிகேதன் பீடத் தலைவர் சிதானந்த் சரஸ்வதி, ரவிசங்கர், பக்வதி சரஸ்வதி உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்களும், நகர துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித், துணை கவர்னர் ஜாக்லின் கோல்மென் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று மாநகர மேயர் அறிவித்திருப்பதாக, துணை மேயர் பார்பரா செக்ஸ்டன் ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, இத்தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “கேட்டுச்சா உதயநிதி ஸ்டாலின் அவர்களே… செப்டம்பர் 3-ம் தேதியை சனாதன நாளாக அறிவித்த அமெரிக்காவின் லூயிஸ்வில்லி மாகாணத்தின் மேயருக்கு நன்றி. அமெரிக்காவின் கென்டக்கியிலுள்ள லூயிஸ்வில்லி மாகாணத்தில் செப்டம்பர் 3-ம் தேதி சனாதன நாளாகக் கொண்டாடப்படும் என்று நகர மேயர் அறிவித்திருக்கிறார். இதுவே சனாதனத்தின் பெருமை! உலகெல்லாம் பரந்து விரிந்திருக்கும் சனாதனத்தின் பெருமையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கேட்டுச்சா @Udhaystalin அவர்களுக்கு….
செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக அறிவித்த அமெரிக்க லூயிஸ்வில்லி மாகாணத்தின் மேயருக்கு நன்றி!
அமெரிக்காவின் கென்டக்கியிலுள்ள லூயிஸ்வில்லி மாகாணத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி சனாதன நாளாக கொண்டாடப்படும் என்று அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.… pic.twitter.com/PDqh98bb3A
— Vanathi Srinivasan (@VanathiBJP) September 6, 2023
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இடதுசாரி அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகள் உதயநிதிக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்ததும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உதயநிதியின் தலைக்கு அயோத்தியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.