குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினப் பெண்ணுக்கு வாக்குச் செலுத்தாத திமுக எப்படிச் சனாதனம் குறித்துப் பேச முடியும்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
`என் மண், என் மக்கள்’ நடைப்பயணத்துக்காக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நேற்று வந்த தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்த தனது பேச்சிலிருந்து பின்வாங்காமல் இருப்பது நல்லது. அப்போதுதான் ஒரு மாற்றம் வரும்.
சனாதனத்தை வேரறுக்க வேண்டுமென்று அவர் சொன்னால், தமிழக அரசின் சின்னம் முதற்கொண்டு மாற்ற வேண்டும். தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தை மாற்றுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினால் முடியுமா? இல்லை உதயநிதியால் முடியுமா? அப்படியேயானாலும் அவர்கள், சின்னத்தை மாற்றித்தான் பார்க்கட்டுமே பார்ப்போம்.
எதுவும் தெரியாமல், புரியாமல், படிப்பறிவு இல்லாமல், சொல்புத்தி, சுயபுத்தி, இல்லாமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிட்டு, `நான் பேசியது சரிதான்’ எனக் கூறும் நபரிடம் என்ன சொல்லிப் புரியவைப்பது.
சனாதன தர்மம் என்பது ஆதியும், முதலும், முடிவுமற்று நீடித்து நிற்கக்கூடிய தர்மம். ஆகவே, சனாதன தர்மம் என்றால் என்னவென்பதை உதயநிதி ஸ்டாலின் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கூட, ஆண்டாள் கோயிலுக்கு வந்து 30 பாசுரங்களைப் படித்திருக்கிறார். இதுவும் ஒரு வகையான சனாதன தர்மம்தான். ஆனால், சனாதன தர்மம் என்றால் பிராமணர்கள்தான் என்று 1949 முதல் தி.மு.க மற்றும் திராவிடக் கழகத்தினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் அரவணைத்துச் செல்லக்கூடியதே சனாதன தர்மம்.
2022-ல், தான் ஒரு பெருமைமிகு கிறிஸ்தவர் எனக் கூறிய மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு, சனாதன தர்மம் குறித்துப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. இதை இந்து மதம், சனாதனம் என்பதற்காக மட்டும் பேசவில்லை.
இதுவே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்துவ மதத்தையும், இஸ்லாமிய மதத்தையும் ஒழிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாலும்கூட, அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து முதல் கண்டனக் குரலாக எனது குரல்தான் பதிவாகியிருக்கும்.
சனாதன தர்மத்தையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். சனாதனத்தைப் பற்றி இவ்வளவு அழுத்தமாகப் பேசுபவர்கள், ஏன் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவுக்கு ஓட்டுப்போடாமல், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிராமணரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஓட்டுப் போட்டனர். அப்படியென்றால் அவர்கள் அப்போது செய்தது சரியா. சனாதன ஒழிப்பு குறித்துப் பேசுபவர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்குத்தானே வாக்குச் செலுத்தியிருக்க வேண்டும். பழங்குடியினப் பெண்ணுக்கு வாக்குச் செலுத்தாத இவர்கள், எப்படிச் சனாதனம் குறித்துப் பேச முடியும்?
வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் என்னென்ன விஷயங்களையெல்லாம் முன்வைத்துப் பேசப்போகிறார்கள் எனத் தெரியாது. `இந்தியா’ என்ற பெயரை `பாரத்’ என மாற்றப்போகிறார்களா.
`ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தைப் பற்றி பேசப்போகிறார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அதற்காக கமிட்டி அமைத்திருக்கிறார்கள். அதை பா.ஜ.க வரவேற்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தலை 1971-லேயே கலைஞர் கருணாநிதி ஆதரித்திருக்கிறார்.
தொடர்ச்சியாக கலைஞர் கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் 2-ம் பதிப்பில், ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவாக அவர் தனது கருத்துகளை எழுதியிருக்கிறார். சொல்லப்போனால் அவர் இன்னமும் ஒரு படி மேலே சென்று நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பஞ்சாயத்து என நான்கு அமைப்புகளுக்கும் சேர்த்து ஒரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
ஆகவே, தனது அப்பாவின் புத்தகத்தையே முதல்வர் மு.க.ஸ்டாலின் படிப்பதில்லை. பிறகு எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஆதரவு கொடுப்பார்… `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது காலத்தின் கட்டாயம். அது, நிச்சயமாக நடந்தே தீரும். அதேபோல சனாதனத்தைப் பற்றிப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன்.
வருகிற 2024 மற்றும் 2026-ல் நடைபெறவிருக்கும் தேர்தல்களை சனாதனத் தேர்தலாக சந்தித்துக்கொள்ளலாமா? தி.மு.க `சனாதனத்தை ஒழிப்போம்’ எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்து, பிரசாரம் செய்யட்டும், பா.ஜ.க `சனாதனத்தைப் பாதுகாப்போம்’ என்று சொல்லி பிரசாரம் செய்கிறோம். மக்கள் யாருக்காக ஓட்டுப்போடுவார்கள் எனப் பார்த்துவிடலாம்.
அப்பாவும் மகனும் ஆட்சிக்கு வந்து முதல் மூன்று வருடங்கள் சனாதன ஒழிப்பு என்பார்கள், நான்காவது வருடம் அப்பா வேல் தூக்குவார். ஐந்தாம் வருடம் அப்பா, மகன் இருவரும் வேல் தூக்கி நடக்க ஆரம்பித்திடுவார்கள்.
அதுபோல் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என நான் கூறிய கருத்துக்கு, `சனாதனம் என்பது வாழைப்பழத்தின் தோல் மாதிரி, இந்து மதம் என்பது வாழைப்பழம் மாதிரி. இதில் வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு பழத்தை மட்டும் சாப்பிட வேண்டும்’ என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் கூறியிருக்கிறார்.
அமைச்சர் சேகர் பாபுவின் மனைவி, இனி கடைக்குச் சென்று வாழைப்பழத்தை வாங்கினால் கடைக்காரரிடம் தோலை எடுத்துவிட்டு பழத்தை மட்டும் கொடுங்கள் என்று வாங்கி வந்து அவருக்கு ஊட்ட வேண்டும்.
அதுபோல் இந்து அறநிலையத்துறையிலிருந்து சேகர் பாபுவுக்குக் கொடுக்கப்படும் வாழைப்பழங்களின் தோலை நீக்கிவிட்டு, பழத்தை மட்டும் அனுப்பிவைக்க வேண்டும்போல. இது போன்ற முட்டாள்களையெல்லாம் அமைச்சராக வைத்துக்கொண்டு, என்ன செய்வதென்றே தெரியவில்லை” எனக் விமர்சித்தார்.