“பாரத்” என்ற பெயர் மாற்றம் தொடர்பாக, இந்தியாவிடமிருந்து கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம் என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது.
நாட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விவகாரம் “இந்தியா”, “பாரத்” பெயர் மாற்றம். அதாவது, வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள். இவர்களை கௌரவிக்கும் விதமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 9-ம் தேதி இரவு விருந்து அளிக்கப்படுகிறது.
இந்த விருந்து தொடர்பாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. அந்த அழைப்பிதழில் “தி பிரசிடென்ட் ஆஃப் இந்தியா” என்பதற்கு பதிலாக “தி பிரசிடென்ட் ஆஃப் பாரத்” என்று அச்சிடப்பட்டிருந்தது.
அதேபோல, இந்தோனேஷியாவில் ஆசியான் இந்தியா மாநாடும், கிழக்கு ஆசிய உச்சி மாநாடும் இன்று நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு இந்தோனேஷியா புறப்பட்டுச் சென்றார். இவரது பயணம் தொடர்பான அழைப்பிதழிலும், “தி பிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா” என்பதற்கு பதிலாக “தி பிரைம் மினிஸ்டர் ஆஃப் பாரத்” என்று அச்சிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்தியாவின் பெயரை பாரத் என்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மாற்றப் போவதாகவும், இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், வரும் 18-ம் தேதி நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வதந்தியை கிளப்பி விட்டன. இதனால், நாட்டில் ஒருவித அசாதாரண சூழல் நிலவியது.
இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, பியூஸ் கோயல் ஆகியோர் இது வெறும் வதந்தி என்று தெளிவுபடுத்தினர். அதேசமயம், நாட்டிலுள்ள பல்வேறு பிரபலங்கள் “பாரத்” பெயர் மாற்றத்திற்கு அமோக ஆதரவைத் தெரிவித்தனர். குறிப்பாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆதரவு தெரிவித்து கருத்துப் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “துருக்கி நாடு துருகியே என்று கடந்த வருடம் பெயர் மாற்றப்பட்டது. இதற்கு அந்நாட்டு அரசிடம் இருந்து முறைப்படி எங்களுக்கு கோரிக்கை வந்தது. அதனடிப்படையில் பெயர் மாற்றப்பட்டது. அதேபோல், இந்தியாவிடம் இருந்து எங்களுக்கு கோரிக்கை வந்தால், நாங்கள் பரிசீலிப்போம்” என்று தெரிவித்ததாக, ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறியிருக்கிறார்.