சனாதனம் குறித்து தவறான கருத்தை ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் பரப்பி வருகின்றனர் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு விழாவில், கலந்து கொண்ட தி.மு.க. எம்.பி, ஆ.ராசா, திராவிட இயக்கங்களால்தான் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார் என்று பேசினார். ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திராவிட இயங்களால் நான் ஆளுநராகவில்லை. மாறாக, நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம்.
ஒருவரது முன்னேற்றத்தில் மற்றவர்களுக்குப் பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் அது சரியான கருத்தாக இருக்கலாம். அதில், எனக்கு உடன்பாடு இல்லை. நான் மருத்துவக் கல்லூரியில் நன்றாக படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிலும் படித்தேன். அதில், வெற்றியும் பெற்றேன். இதுதான் உண்மை.
சனாதனம் என்றால் தவறான கருத்தை ஆ.ராசா போன்ற திமுகவினர் பரப்பி வருகின்றனர். இதற்கு உதாரணமாக ஆ.ராசாவை குறிப்பிடலாம். அவர், இப்போது மட்டுமல்ல, எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார்.
சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல், உதயநிதி அதைப்பற்றி பேசக்கூடாது. சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கிறார்கள். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள்.
திமுகவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவிக்கு வரமுடியுமா? உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.உதயநிதியைவிட நன்றாக உழைத்தவர்கள் யாருமே திமுக-வில் இல்லையா? என கேள்வி எழுப்பியவர்,
திமுகவில் உதயநிதி போன்றவர்கள் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடிகிறது. ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? அல்லது முதல்வராகவோ ஆக்கிவிட முடியுமா?
தமிழ்நாடில் கல்வியின் தரம் உயர்ந்ததற்கு காரணம் காமராஜர். அது அவர் போட்ட விதை. செய்யாததை எல்லாம் நீங்களே செய்ததாக திமுகவினர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என காட்டமாக பதிலடி கொடுத்தார்.