தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமானநிலையத்திற்குக் கடத்தி வரப்பட்ட 14 அரிய வகை பாம்புக் குட்டிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில், வந்த பயணிகளைச் சென்னை விமான நிலையச் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 27 வயது ஆண் பயணி ஒருவர், பெரிய கூடை ஒன்றை எடுத்து வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து, அவரை நிறுத்தி விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், உடைமைகளைச் சோதனை செய்தனர். அப்போது அவரது கூடையிலிருந்த பிளாஸ்டிக் பைகளைச் சோதனை செய்ததில், காடுகளில் வாழும் அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால், பாம்புக் குட்டிகளை கூடைக்குள் வைத்துக் கடத்தி வந்த பயணி, இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தப் பாம்புகள் ரப்பர் பாம்புகள் போல், விஷமற்ற விளையாட்டு பாம்புகள் தான் என்று கூறியபடி, பாம்புக் குட்டிகளை எடுத்து, தனது கைகளில் வைத்துக் காட்டினார். இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்த அதிகாரிகள், பாம்புக் குட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், சென்னையில் உள்ள மத்திய வனவிலங்குக் குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, 14 அரியவகை மலைப்பாம்பு குட்டிகளையும், மீண்டும் சென்னையிலிருந்து, தாய்லாந்துக்கு அனுப்ப முடிவு செய்தனர்.