சென்னையில் நேற்றிரவு வெளுத்து வாங்கிய கனமழையால் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தியாகராயநகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பாரிமுனை, மீனம்பாக்கம் பகுதிகளில் காற்று வேகமாக வீசியதுடன், கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால், சென்னை விமான நிலையத்தில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல், சென்னையிலிருந்து புறப்படும் விமானச் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆந்திராவின் விஜயவாடாவிலிருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில் கனமழையால் தரையிறங்க முடியாமல், திருச்சிக்குத் திருப்பிவிடப்பட்டது. இதுபோல், பல்வேவேறு விமானங்கள் திருப்பி விடப்பட்டன.