இந்தியாவில் கடந்த நிதியாண்டில் நடந்த டிஜிட்டல் பரிமாற்றம், இந்தியாவின் ஜி.டி.பி.யில் 50 சதவீதம் என உலக வங்கி கூறியுள்ளது.
ஜி20 கொள்கை குறித்த ஆவணத்தை உலக வங்கி தயாரித்துள்ளது. அதில் இந்தியா குறித்து “பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிதிச் சேவைகள் அணுகுவதை உறுதி செய்யப்படுவது என்பது, ஜன்தன் வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் செல்போன்கள் இல்லாமல் இருந்திருந்தால் 47 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், இந்தியா இதனை 6 ஆண்டுகளில் செய்து சாதனை நிகழ்த்தி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், “பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கிக் கணக்குத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது, 2015 மார்ச் மாதம் 14.72 கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டன. 2022 ஜூன் கணக்குப்படி 46.20 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. இதில் 26 கோடி வங்கிக் கணக்குகள் பெண்களுக்குச் சொந்தமானது.
இதற்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பங்கும், இந்திய அரசு எடுத்த பல நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானதாக உள்ளன. யு.பி.ஐ. பரிமாற்றம் பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், பயனர்களுக்கு ஏற்ற செயல்பாடு, வங்கி அம்சங்கள், தனியார் பங்கேற்பு ஆகியவையும் இருந்தன.
யு.பி.ஐ. மூலம் கடந்த மே மாதம் மட்டும் 941 கோடி முறை பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.14.89 டிரில்லியன் ஆகும். 2022- 23-ம் நிதியாண்டில், யு.பி.ஐ. பணப் பரிமாற்றமானது, இந்தியாவின் ஜி.டி.பி.யில் 50 சதவீதம் அளவுக்கு நடந்து சாதனையாக மாறியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்பால், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்திறன் அதிகரித்துள்ளதுடன், சிக்கல், செலவு மற்றும் நேரம் ஆகியவை குறைந்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டமைப்பால், ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.1,912.36 வங்கிகள் செலவு செய்து வந்த நிலையில், தற்போது ரூ.8.31 ஆக குறைந்துள்ளது.
பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவதால், 2022 மார்ச் கணக்கின்படி இந்திய அரசிற்கு 33 பில்லியன் டாலர் மிச்சமாகி உள்ளது. இது இந்தியாவின் ஜி.டி.பி.யில் 1.14 சதவீதமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.