உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர், இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து, இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ. அறிவித்தது. இதில், சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, சூரியகுமார் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த மாற்றத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வரவேற்புத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் அளித்திருக்கும் பேட்டியில், “சஞ்சு சாம்சன் தொடர்பாக தேர்வுக் குழுவினர் எந்தவொரு கடினமான முடிவையும் எடுக்கவில்லை. அவர், மிகச்சிறந்த வீரர். திறமையான பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். எனினும், உங்களால் 15 வீரர்களை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். அந்த வகையில், சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சூரியகுமாரை எடுத்ததுதான் சரியான முடிவு.
காரணம், மத்திய ஓவர்களில் சூரியகுமாரைப் போல் யாராலும் விளையாட முடியாது. முதல் பந்தில் இருந்தே அவரால் பெரிய ஷாட்களை ஆடி ரன்களைக் குவிக்க முடியும். சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இதனால் அவர் அதிக ரன்களைக் குவிக்க வாய்ப்பு இருக்கிறது. பலரும் டி20 கிரிக்கெட்டில் அவர் செய்வதை ஏன் ஒரு நாள் கிரிக்கெட்டில் செய்ய தவறிவிட்டார் என்று கேட்கிறார்கள். இதற்குப் பேட்டிங் வரிசைதான் காரணம்” என்று கூறியிருக்கிறார்.