மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நள்ளிரவில் கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் தூக்கத்திலேயே மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில், நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கும் மராகேஷ் பகுதியிலுள்ள அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 11.11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3.40) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 19 நிமிடங்களுக்கு நீடித்திருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தால் மராகேஷ், சிச்சாவ்வா, தாரூடேன்ட், அல் ஹவுஸ், ஓவர்சாசேட், அஜிலால் ஆகிய பகுதிகளில் இருந்த ஏராளமான வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுக்கள் போல சரிந்து விழுந்தன. இச்சம்பவத்தில் 300 பேர் உயிரிழந்ததாகவும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இடிபாடுகளுக்கிடையே இன்னும் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாலும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, நிலநடுக்கம் காரணமாக, மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். மேலும், நில நடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நிலையில், மொராக்கோ நிலநடுக்கம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் காணொளிகள் பரவி வருகின்றன. அதில், கட்டடங்கள் குலுங்குவது, மக்கள் பீதியுடன் அலறியபடியே வீதிகளில் ஓடிவருவது, இடிந்த கட்டடங்கள், இடிபாடுகளுடன் கூடிய தெருக்கள் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கு முன்பும் மொராக்கோவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்றன. 2004-ம் ஆண்டு வடகிழக்கு மொராக்கோவின் ஹோசிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தனர். 1980-ல் எல்.அஸ்னான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.