கோவை அருகே இறந்துபோன கருடனின் பூதஉடலை, தங்களது சம்பிரதாய வழக்கப்படி தகனம் செய்து, அதன் அஸ்தியை பவானி ஆற்றில் கரைத்துள்ள நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ளது திம்மராயன் பாளையம் என்ற கிராமம். இந்த கிராமத்தில், பெருமாள் கருடன் என சொல்லப்படும், வெண் நிற கழுத்து கொண்ட கருடன் ஒன்று இறந்து கிடந்தது. இதை கண்டன அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களது கிராமத்தில் ஒருவர் இறந்தால், எப்படி சடங்கு செய்வார்களோ அதுபோல், இறந்துபோன கருடனுக்கு பல்வேறு சடங்குகள் செய்தனர். பின்னர், பூக்களால் ஆன தேர்கட்டி அதில், கருடனின் பூத உடலை, பொது மக்கள் சுமந்து சென்றனர். இடுகாட்டில் வைத்து, கருடனின் உடலை எரியூட்டினர்.
பின்னர், எரியூட்டப்பட்ட உடலில் இருந்த சாம்பலை ஒரு குடுவையில் அடைத்து, பவானி ஆற்றுக்கு எடுத்து வந்தனர். அங்கு, மனிதர்களுக்கு செய்யும் வழக்கமான சடங்குகள் செய்யப்பட்டு, கருடனின் எரியூட்டப்பட்ட பூத உடலின் சாம்பலை ஆற்றில் கரைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.