ஜி20 உச்சி மாநாட்டில் உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கிடையேயான் பொருளாதார இணைப்பு வழித்தடத் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவித்தார்.
ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடக்கிறது. முதல் நாளான இன்று, மற்ற நாடுகளுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக, ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் மற்ற உலகத் தலைவர்களும் இவ்வழித்தடத் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த வழித்தடத் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “இந்த ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. வர்த்தக இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இது ஒரு புதிய திசையை கொடுக்கும். வரும் காலங்களில், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு இந்த வழித்தடம் ஒரு பயனுள்ள பாதையாக மாறும்” என்று குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், “இது மிகச்சிறந்த திட்டம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒரே பூமி, ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்பது தான் ஜி20 மாநாட்டில் சுவனம் செலுத்தப்பட்டது. இன்று நாம் பேசும் கூட்டாண்மையும் இதுதான். நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குதல், வளமான உள்கட்டமைப்பு முதலீடுகளை உருவாக்குதல் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
இந்த கொள்கையை அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் ஏற்றுக்கொண்டு, இதனை நிஜமாக்குவதற்கான முக்கிய வழிகளை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்ய நாங்கள் பணியாற்றும்போது, நமது முதலீடுகளின் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதனால்தான் சில மாதங்களுக்கு எங்களது நட்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா, பொருளாதார காரிடர்களில் முதலீடு செய்யும் என்று அறிவித்தோம்” என்றார்.
யுரேசியா குழுமத்தின் தெற்காசிய பயிற்சித் தலைவர் பிரமித் பால் சௌதுரி கூறுகையில், “மும்பையிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் கப்பல் கொள்கலன்களை, எதிர்காலத்தில் துபாயிலிருந்து இஸ்ரேல் வழியாக ஐரோப்பாவிற்கு இரயில் மூலம் எடுத்து செல்ல முடியும். இந்த கணிப்பு உண்மையாகி விட்டால், பணமும் நேரமும் மிச்சமாகும்” என்றார்.
சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பேசும்போது, “இக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் பொருளாதார வழித்தடம் மற்றும் அதற்கான திட்டங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை எதிர்பார்க்கிறோம். இந்த முக்கியமான பொருளாதார வழித்தடத்தை நிறுவுவதற்கு அடிப்படைக் கட்டமைப்பை எட்ட எங்களுடன் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
அதேபோல, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனும் இத்திட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பாராட்டினார்.
சர்வதேச வழித்தடம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் இரயில்வே மற்றும் துறைமுக வசதிகளை இந்தியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க உள்ளது. இத்திட்டத்தினால் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகம் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.