ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று இரவு விருந்து அளித்தார். இவ்விருந்தில் சாலையோர மற்றும் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்கள் என மொத்தம் 170 பேர் விருந்தில் கலந்துகொண்டனர்.
ஜி20 அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகித்திருக்கிறது. இதையொட்டி, ஜி20 அமைப்பின் பல்வேறு பிரிவுகளின் மாநாடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்தன. முக்கிய நிகழ்வான ஜி20 உச்சி மாநாடு, நேற்று தொடங்கியது. இதற்காக, ஜி20 அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக 20 நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களை கௌரவிக்கும் விதமாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று இரவு விருந்தளித்தார்.
இந்த விருந்தில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்கள் உள்ளிட்ட 170 பேர் கலந்துகொண்டனர். விருந்துக்கு வந்த உலக நாடுகளின் தலைவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். விருந்தின்போது, 50-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இசைக் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விருந்தில் நமது பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் சைவ மற்றும் அசைவ உணவுகள் இடம்பெற்றன. குறிப்பாக, இந்தியாவில் பிரபலமான சாலையோர உணவு வகைகளான பானி பூரி, சாட், மகாராஷ்டிராவில் பிரபலமான பாவ் பாஜி, தமிழகத்தின் பணியாரம், பீகாரின் சோக்கா மற்றும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட இட்லி, புலாவ் உள்ளிட்ட பல்வேறு வகைகள் இடம்பெற்றிருந்தன. மேலும், பரிமாறப்பட்ட ஒவ்வொரு உணவின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு பகுதியும் மெனுவில் இடம்பெற்றிருந்தது.
ஜி20 விருந்து குறித்து பேசிய ஜி20 செயல்பாடுகளுக்கான சிறப்புச் செயலாளர் முக்தேஷ் கே பர்தேஷி, “இந்தியாவின் தெருவோர உணவுகளை உலக பிரநிதிகளிடம் கொண்டு செல்வதே ஒட்டுமொத்தமான குறிக்கோளாக இருந்தது. மேலும், சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகளை தலைவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதேசமயம், பிரதிநிதிகள் இந்தியாவின் பல்வேறு பிராந்திய உணவு வகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் விருந்திற்கான மெனு தயாரிக்கப்பட்டது” என்றார்.