ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்ட நிலையில், வரலாறு படைக்கப்பட்டதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறது.
ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, இந்தியா தரப்பில் டெல்லி பிரகடனம் தயாரிக்கப்பட்டது. இப்பிரகடனத்தில், உக்ரைன் போர் தொடர்பான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக, உறுப்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதாவது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாகவும், ரஷ்யாவும் சீனாவும் எதிரணியாகவும் தங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தன.
இதையடுத்து, இந்தியா சார்பில் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, இரு தரப்பினர் கூறிய கருத்துகளின் அடிப்படையில், டெல்லி பிரகடனத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர், டெல்லி பிரகடனத்தை ஜி20 அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டன.
இதைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துடனும், எண்ணத்துடனும் இப்பிரகடனம் ஏற்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், சிறந்த, வளமான மற்றும் இணக்கமான எதிர்காலம் உறுதி செய்யப்படும். ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளித்த அனைத்து ஜி20 உறுப் பினர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.
பின்னர், ஜி20 மாநாட்டில் 37 பக்கங்கள் கொண்ட டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. இப்பிரகடனத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்…
இந்த பிரகடனம், இந்த உலகிற்காக, மக்களுக்காக, அமைதிக்காக, வளத்திற்காக ஏற்படுத்தப்படுகிறது என்ற உறுதிமொழியுடன் மேற்கொள்ளப்படுகிறது. ஜி-20 அமைப்பு பாதுகாப்பு சார்ந்த அமைப்பு கிடையாது. சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பாகும். ஆனால், போர், உள்நாட்டு குழப்பங்களால் உலக பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. உக்ரைன் போரால் சர்வதேச அளவில் உணவு தானியம், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நிரந்தர அமைதி திரும்ப வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை சாசனத்திற்கு இணங்க, அனைத்து நாடுகளும் எந்தவொரு நாட்டின் பிராந்திய பகுதியை கையகப்படுத்த படைகளை பயன்படுத்தக் கூடாது. அணு ஆயுதங்களின் பயன்பாட்டை ஒருபோதும் ஏற்க முடியாது. இன்றைய சகாப்தத்தில், போர் இருக்கக் கூடாது. அதேபோல, அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுதில் உறுதியாக உள்ளோம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
ஊழலுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஊழலை எதிர்த்துப் போராட, சட்ட அமலாக்கம் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தகவல் பகிர்வு, சொத்து மீட்பு வழிமுறைகள் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும். சமமான வளர்ச்சியை ஊக்குவித்தல், பேரியல் பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதன் வாயிலாக, பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்போம். இத்தகைய அணுகுமுறை வலுவான, நிலையான, சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைய உதவும்.
உலகளாவிய உணவு பாதுகாப்பையும், ஊட்டச்சத்தையும் அனைவருக்கும் மேம்படுத்துவதில் ஜி – 20 உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ளவர்கள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவ, உயர்தர கல்வி மற்றும் திறன் பயிற்சி ஆகியவற்றில் ஜி20 உறுப்பு நாடுகள் உறுதி பூண்டுள்ளன. பாலின சமத்துவம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து பெண்கள் மற்றும் சிறுமியரின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் ஜி20 நாடுகள் உறுதிபூண்டுள்ளன.
21-ம் நுாற்றாண்டின் தேவைகளுக்கு பொருத்தமான, உலகளாவிய நியாயமான, நிலையான மற்றும் நவீன சர்வதேச வரி முறையை நோக்கிய ஒத்துழைப்பைத் தொடர்வதற்கான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். 21-ம் நுாற்றாண்டின் சமகால சவால்களை எதிர்கொள்ளவும், உலகளாவிய நிர்வாகத்தை மிகவும் திறம்படவும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் ஆக்குவதற்கு, புத்துயிர் பெற்ற பலதரப்பு அமைப்புகள் தேவை.
மேலும், சர்வதேச நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முன்னேற்றத்தை, தொழில்நுட்பம் ஏற்படுத்துகிறது. பொது மற்றும் தனியார் துறைகளால் கட்டமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பான மற்றும் நெகிழ்வான உட்கட்டமைப்பின் அடிப்படையில், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு உருவாக்கப்படலாம். இவ்வாறு டெல்லி பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.