மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நீடித்து வரும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில், நேற்று முன்தினம் நள்ளிரவு உள்ளூர் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம், மராகேஷ் பகுதியிலுள்ள அட்லஸ் மலைத்தொடரில் 18.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மராகேஷ், சிச்சாவ்வா, தாரூடேன்ட், அல் ஹவுஸ், ஓவர்சாசேட், அஜிலால் ஆகிய பகுதிகளில் இருந்த ஏராளமான வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சீட்டுக்கட்டுக்கள் போல சரிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும், நள்ளிரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் குவியல் குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி விட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலநடுக்கம் குறித்து மொராக்கோ உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 2,012 பேர் பலியாகி இருக்கின்றனர். பெரும்பான்மையானவர்கள் அல் ஹவுஸ், மையப்பகுதி மற்றும் தாரூடன்ட் மாகாணங்களில் வாழ்ந்தவர்கள். மேலும், 2,059 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இவர்களில் 1,404 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 3 நாள்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து பொதுக் கட்டடங்களிலும் நாட்டின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தால் யுனெஸ்கோவால் உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள மதீனா என்ற சிவப்பு சுவர்களும் சேதமடைந்தது. இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அல்ஜீரியா, போர்ச்சுகல் போன்ற அண்டை நாடுகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், அங்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.
இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அதேசமயம், மொரோக்கோவின் அண்டை நாடாகவும், போட்டியாளர் நாடாகவும் கருதப்படும் அல்ஜீரியா, மொராக்கோ விமானங்கள் தனது வான்வழியை பயன்படுத்த 2 ஆண்டுக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது உதவி விநியோகம் மற்றும் மருத்துவ உதவிகளைச் செயல்படுத்த ஏதுவாக தடையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.