ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கையில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற இப்போட்டியானது மதியம் 3:00 மணிக்கு தொடங்குகிறது.
2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகின்றன. இன்று இலங்கையில் நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லப்போவது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, இதுவரை 7 முறை ஆசியக் கோப்பையை வென்றிருக்கிறது. ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணிதான் இதுவரை அதிக முறை கோப்பையை வென்றிருக்கிறது என்னும் பெருமையோடு உள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை 2 முறை மட்டுமே ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.
இந்திய அணியின் பலமாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர். போட்டி தொடக்கத்தில் இவர்கள் ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம், இந்தியாவின் பலவீனமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதேசமயம், பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மற்றும் ஃபகார் ஜமான் போன்றவர்களின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆசியக் கோப்பையில் ஏற்கெனவே நடந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் மழை பெய்ததால் போட்டி ரத்துச் செய்யப்பட்டது. அப்போட்டியில் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியின்போதும் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மழை வந்து ஆட்டம் தடைப்பட்டால் ரிசெர்வ் டே அதாவது அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது. அதேசமயம், போட்டி நடைபெற்றால் போதும் என்கிற மனநிலையில் இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இப்போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 59% இந்தியா வெற்றி பெறும் என்றும், 41% பாகிஸ்தான் வெற்றிபெறும் என்றும் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.