தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில், நிலுவையிலிருந்த 53,836 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன.
நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகப்படியாகத் தேங்குவதைத் தவிர்ப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எளிதாகத் தீர்வுகாணவும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் உதவுகிறது. ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் தங்களது வழக்குகளைச் சமரசமாகத் தீர்த்துக்கொள்ளலாம்.
இதில், நிலுவையில் உள்ள வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வங்கிக் கடன், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்கு , சிவில் வழக்கு உள்ளிட்ட வழக்குகளுக்குச் சமரசம் செய்யப்பட்டுத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குக் காசோலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா வழிகாட்டுதலின் படி, மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், சி.சரவணன் ஆகியோர் மேற்பார்வையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் லோக் அதாலத் நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்திரசேகரன், தமிழ்செல்வி, முகமது சபீக், சத்யநாராயண பிரசாத், என்.மாலா, சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி, இலட்சுமிநாராயணன், இராஜசேகர் ஆகியோர் தலைமையில் பத்து அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஐந்து அமர்வுகளும் அமைக்கப்பட்டு வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன.
இதில், 1,250 வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில், 108 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு, 13 கோடியே 30 இலட்சம் நிவாரணம் கிடைக்கப் பெற்றது. இதேபோல், மாநிலம் முழுவதும் மாவட்டம், வட்டம் வாரியாக நீதிபதிகள் தலைமையில் 440 அமர்வுகள் அமைக்கப்பட்டு, 53,836 வழக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம், 323 கோடியே 85 இலட்சம் ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கிடைத்துள்ளது.