டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜி20 தலைமைப் பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி20 தலைவர் பதவியை பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிடம் பாரதப் பிரதமர் மோடி முறைப்படி ஒப்படைத்தார்.
கடந்த 1999-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜி20 அமைப்பில், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டிடம் ஒப்படைக்கப்படும்.
அந்த வகையில், கடந்தாண்டு தலைமை வகித்த இந்தோனேஷியா, தலைமைப் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைத்தது. இதையடுத்து, ஜி20 மாநாட்டுக்கான லோகோ, ‘ஒரே பூமி; ஒரே குடும்பம்; ஒரே எதிர்காலம்’ என்ற மாநாட்டின் கருப்பொருள் ஆகியவற்றை இந்தியா வெளியிட்டது. தொடர்ந்து, நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடைபெற்றன.
இக்கூட்டங்களில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன் நிறைவாக, ஜி20 அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் தவிர, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட 18 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உச்சி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜி20 டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு இன்று நிறைவடைந்தது. இதையடுத்து, ஜி20 தலைமைப் பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிடம் தலைமை பதவியை பாரதப் பிரதமர் மோடி முறைப்படி ஒப்படைத்தார்.