ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 1.34 கோடி ரூபாய் வசூலானதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில். உப்பாற்றங்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோவிலில் அம்மன் சயனநிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்து செல்கின்றனர்.
குறிப்பாக, அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட விழா நாட்களில் கோவிலில் கூட்டம் அலைமோதும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன், காணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக, 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல் அவ்வப்போது திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் உண்டியல்கள் மூலம் செலுத்திய காணிக்கைத் தொகை மொத்தம் 1,34,30,706 ரூபாய் ரொக்கம் மற்றும் 786 கிராம் தங்கம், 2 கிலோ 20 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.