சீனாவின் புதிய வரைபடத்துக்கு இந்தியா, தைவான், மலேசியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து, ஜப்பானும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனா சமீபத்தில் தனது நாட்டின் புதிய வரைப்படத்தை வெளியிட்டது. அதில், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, வியாட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் குறிப்பிட்ட சில பகுதிகளை இணைத்திருந்தது. சீனாவின் வரைப்படத்தில் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் இருந்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அதேபோல், தெற்கு சீனக் கடலின் பெரும் பகுதியைத் தனது பகுதியாகச் சீனா உரிமை கொண்டாடியுள்ளது. இதற்கு நேபாளம், மலேசியா, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த நிலையில், ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள சென்காகு தீவுகள் சீனாவின் புதிய வரைப்படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அத்தீவிற்கு சீனப் பெயரான டியாயு தீவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஜப்பான் அரசின் தலைமைச் செயலாளர் ஹிரோகாசு மட்கனோ கூறும்போது, “ஜப்பானுக்குச் சொந்தமான சென்காகு தீவைச் சீனா தனது வரை படத்தில் இணைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
வரலாற்று ரீதியாக சர்வதேச சட்டத்தின் கீழும் சென்காகு தீவுகள் ஜப்பானுக்குச் சொந்தமானது. அந்த வரை படத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி உள்ளோம். இவ்விவகாரத்தில் அமைதியாக மற்றும் உறுதியான வழியில் ஜப்பான் பதிலளிக்கும்” என்று கூறியுள்ளார்.