சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், சட்ட விதிகளை மீறி கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, பதவி விலக வலியுறுத்தி, தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவும் கலந்து கொண்டார். இது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும், தமிழக முதல்வரிடமும் கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டது.
இது தவிர, பா.ஜ.க.வின் கோரிக்கையை ஏற்று, சேகர் பாபு அமைச்சர் பதவியிலிருந்து 10-ம் தேதிக்குள் விலக வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கெடு விதித்திருந்தார். அவ்வாறு பதவி விலகா விட்டால், 11-ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன்பு, பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை விதித்த கெடு இன்றோடு முடிகிறது. இதனால், சென்னையில் அறநிலையத் துறை தலைமை அலுவலகம் முன்பு மதியம் 3 மணிக்கு பா.ஜ.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு காவல்துறையினரின் அனுமதியைப் பெறுவதற்காக பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், சுமதி வெங்கடேசன், ஆன்மிக பிரிவு மாநிலத் தலைவர் நாச்சியப்பன், மாநிலச் செயலாளர் வினோத் ராகவேந்திரா ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவை சந்தித்து மனு அளித்தனர்.
காவல்துறையினர் அனுமதி அளிக்காதபட்சத்தில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.