மாலியில் சுற்றுலாப் படகு மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இராணுவம் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், 50 தீவிரவாதிகள், 49 சுற்றுலாப் பயணிகள், 15 இராணுவ வீரர்கள் உட்பட 115 போ் உயிரிழந்தனர்.
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய போராட்டக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில சமயம் பொதுமக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, இரக்கம் இல்லாமல் துன்புறுத்திச் சுட்டுக்கொன்று வருகின்றனர்.
இந்த நிலையில், அந்நாட்டின் வடக்கு காவ் பாம்பாவில் உள்ள இராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதேபோல, நைஜர் ஆற்றில் திக்புகுடு பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகின் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 49 பொதுமக்களும், 15 இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், “நைஜா் நதி வழியாக வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த பயணிகள் படகு மீது தீவிரவாதிகள் சரமாரித் தாக்குதல் நடத்தினா். அப்போது அந்தப் படகில் இருந்த இராணுவ வீரா்கள் பயங்கரவாதிகள் மீது எதிா் தாக்குதல் நடத்தினா். இதில், 15 இராணுவ வீரா்களும், 49 பொதுமக்களும் உயிரிழந்தனா். அதேபோல, 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா்” என்று தெரிவித்தனர். இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஜே.என்.ஐ.எம். என்கிற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.