மக்களவைத் தேர்தலில் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தியது உண்மைதான். அதேசமயம், தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகௌடா கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகாவில் பா.ஜ.கவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் (ம.ஜ.த.) எதிர் கட்சிகளாக இருக்கின்றன. சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வும், ம.ஜ.த.வும் தோல்வியடைந்தததால், இரு கட்சிகளும் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டிருக்கின்றன.
இந்த சூழலில், சமீபத்தில் டெல்லி சென்ற ம.ஜ.த. தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகௌடா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உடன்படிக்கை ஏற்பட்டது. இதை பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் உறுதி செய்தனர். ஆனால், ம.ஜ.த. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, கூட்டணி குறித்து தொண்டர்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்பதாக கூறியிருந்தார். அதன்படி, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ம.ஜ.த. தொண்டர்கள் மாநாடு நேற்று நடந்தது. இம்மாநாட்டை தேவகௌடா தொடங்கி வைத்தார். மாநாட்டில் பேசிய குமாரசாமி, “மக்களவைத் தேர்தல் செலவுக்காக பிரபல பில்டர்களிடம் தலா 2,000 கோடி ரூபாய் பிடுங்கும் பணியில் ஆளும் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டிருக்கின்றனர்.
பெயரளவுக்கு ‘இண்டியா’ கூட்டணி என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், கர்நாடக வளத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ‘நைஸ்’ சாலை முறைகேட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலத்தை விழுங்கி உள்ளனர். அமைச்சர்களே முறைகேடு நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளனர். என்னுடன் பேரம் பேச சிங்கப்பூருக்கு வந்திருந்தனர். திட்டி அனுப்பி விட்டேன். கட்சியைக் காப்பாற்றுவதற்காக 2006-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. பின்னர், 2018-ல் காங்கிரஸின் பேச்சுக்கு மயங்கி கூட்டணி அமைத்தேன். இதன் பிறகுதான், அவர்களின் உண்மை முகம் தெரிந்தது. எனவே, மீண்டும் கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆகவே, பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு துவங்கி உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய ம.ஜ.த. தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகௌடா, “மக்களைவத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தியது உண்மைதான். ஆனால், தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை. தொகுதிப் பங்கீடு தொடர்பாக குமாரசாமிதான் மோடியுடன் பேசுவார். எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்று நாங்கள் கேட்க மாட்டோம். ஒவ்வொரு தொகுதியின் அரசியல் நிலவரம் குறித்து டெல்லி தலைவர்களிடம் விளக்கி உள்ளேன். விஜயபுரா, ராய்ச்சூர், பீதர் ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கப்படும். ஏனென்றால் அந்தத் தொகுதிகளில் நாங்கள் ஆதரவளித்தால் பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதி” என்றார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று குமாரசாமி, தேவகௌடா ஆகிய இருவருமே பேசியிருப்பதால் விரைவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.