காலத்துக்கேற்ப நாம் மாறாவிட்டால் நமது இருப்பை இழந்துவிடுவோம். ஆகவே, உலகத்தின் உண்மையான யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உட்பட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தாண்டு இந்தியா ஏற்றிருந்த நிலையில், மேற்கண்ட அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டின் மையப் பொருளாக ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 3 அமர்வுகளாக நடந்த இந்த உச்சி மாநாட்டில், கடந்த 9-ம் தேதி ஒரே பூமி, ஒரே குடும்பம் என்கிற தலைப்புகளில் இரு அமர்வுகள் நடந்தன. நேற்று ஒரே எதிர்காலம் என்கிற தலைப்பில் அமர்வு நடந்தது.
இந்த அமர்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “இந்த உலகை சிறந்த எதிர்காலத்துக்கு நாம் அழைத்துச் செல்ல வேண்டுமானால், தற்போதைய யதார்த்தங்களுக்கேற்ப உலக அமைப்புகள் இருப்பது அவசியமாகும். அந்த வகையில், ஐ.நா. உருவாக்கப்பட்டபோது உலகில் 51 நாடுகளே இருந்தன. தற்போது, 200 நாடுகள் இருக்கின்றன. ஆனாலும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் எண்ணிக்கை மாற்றப்படவில்லை. அன்றைக்கு இருந்த அதே அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.
இந்த உலகம் நிறையவே மாறி இருக்கிறது. அதற்கேற்ப புதிய யதார்த்தம், உலகளாவிய கட்டமைப்புகளில் பிரதிபலிக்க வேண்டும். அந்த வகையில், ஜி20 அமைப்பில் புதிதாக ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக சேர்த்திருக்கிறோம். அதேபோல, சர்வதேச அமைப்புகளிலும், பல நாடுகள் இணைந்திருக்கும் வளர்ச்சி வங்கிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்த மாற்றங்கள் உடனடியாகவும், செயலாக்கமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
அதேபோல, எதிர்கால உலகுக்கு மிகப் பெரும் சவாலாகவும், பிரச்னையாகவும் இருக்கப் போவது, சைபர் பாதுகாப்பு மற்றும் ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயமும்தான். ஆகவே, இதை கட்டுப்படுத்த உலகளாவிய நடைமுறைகள் தேவை. இணைய உலகமானது பயங்கரவாதத்துக்கு நிதி சேர்ப்பதற்கான தளமாகவும் மாறி இருக்கிறது. எனவே, ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பும், வளர்ச்சியும் மிகவும் முக்கியமாகும். ஒவ்வொரு நாடும் பாதுகாப்பாக இருப்பது, அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பாக அமையும். இதுவே, ஒரே எதிர்காலம் என்பதை வலுவாக்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, மனிதகுல நலனுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும். ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் நம் கூட்டு திட்டங்கள் இல்லாமல், மனிதகுல நலன் அடிப்படையில் இருக்க வேண்டும். இதுவே ஒரே எதிர்காலத்துக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.