சென்னையில் நடிகர் சங்க கட்டிடம் ரூ.40 கோடியில் உருவாக்கப்படும் என்றும், அதற்கு ரூ.40 கோடி கடன் வாங்க, கூட்டத்தில் ஒப்புதல் வாங்கியுள்ளோம் என்று, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், நடிகருமான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழுக் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையிலும், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, நடிகர் சங்கத்தின் எதிர்காலத் திட்டம் குறித்து, பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விஷால் , செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எங்களை 2-வது முறையாகத் தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு நாங்கள் ஒரு உறுதிமொழி கொடுத்துள்ளோம். அது, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்பதுதான். இந்த உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அடுத்த பொதுக்குழுக் கூட்டம், நடிகர் சங்க கட்டிடத்தின் சொந்த கட்டிடத்தில் நடைபெறும்.
எங்கள் அணி அளித்துள்ள அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம். அதேபோன்று, நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக 40 கோடி ரூபாய் கடன் வாங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழு ஒப்புதல் அளித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தில்தான், எனது திருமணம் நடைபெறும் என்றார் உறுதியாக.
இந்த கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.