மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி இடையே வரும், 17 -ம் தேதி முதல் சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக, இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. இது 46 கிலோ மீட்டர் பயணமாகும். இதில் மேட்டுப்பாளையம் கடல் மட்டத்தில் இருந்து 330 மீட்டர் மேலே அமைந்துள்ளது. ஆனால், ஊட்டி கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் மேலே அமைந்துள்ளது.
நமது பாரத தேசத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடமாக ஊட்டி திகழ்ந்து வருகிறது.
ஊட்டி மலை ரயிலில் பயணிப்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது, வெளி நாடுகளில் இருந்தும் கூட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வருபவர்கள், மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி மாவட்டம், ஊட்டி இடையே மலை இரயிலில் பயணம் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், ஊட்டி மலை இரயிலில் இருக்கைகள் எப்போதும் காலியாக இருப்பதில்லை.
இந்த மலை இரயில் தனது பயணத்தின்போது 16 சுரங்கங்களையும், 250 பாலங்களையும், 208 வளைவுகளையும் கடந்து செல்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு கண்டுகளிக்கலாம்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் இடையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறை நாட்களில் சிறப்பு மலை இரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஊட்டியில் இருந்து குன்னூருக்குச் செப்டம்பர் 16, 17, 30, அக்டோபர் 1 -ம் தேதி மலை இரயில் இயக்கப்பட உள்ளது. அதே போல் குன்னூரில் இருந்து ஊட்டிக்குச் செப்டம்பர் 17, 18, அக்டோபர் 1, 2 ஆகிய தேதியிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்குச் செப்டம்பர் 16, 30, அக்டோபர் 21, 23 ஆகிய தேதிகளிலும் மலை இரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.