சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சட்ட விதிகளை மீறி மாநாட்டில் கலந்து கொண்டார். இதனால், சேகர் பாபு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு பேசினார். அவரது இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் ஆளுநரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
பாஜகவின் கோரிக்கையை ஏற்று, 10-ம் தேதிக்குள் சேகர் பாபு, அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், இல்லையெனில், 11-ம் தேதி தமிழகம் முழுவதும், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன்பு, பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை விதித்த கெடு, நேற்றோடு நிறைவு பெற்றது.
இந்த நிலையில், சென்னையில் அறநிலையத் துறை தலைமை அலுவலகம் முன்பு மதியம் 3 மணி அளவில் பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது.
இதனிடையே, இந்து சயம அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் திருச்சியில் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சேகர் பாபுவையும் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி மற்றும் மாவட்டத் தலைவர் மோகனராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்களைக் கைது செய்தனர்.
இந்து சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவைக் கண்டித்தும் பதவி விலகக் கோரியும், இன்று ராணிப்பேட்டை, ராஜேஸ்வரி திரையரங்கம் அருகில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்ட தலைவர் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர்பாபு பதவிவிலகக்கோரி, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கண்டன உரையாற்றிய தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மஹாலக்ஷ்மி திரளான தொண்டர்களுடன் கைதானார்.
இதேபோல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் கைதாகினர்.