உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க G20 மாநாட்டை பார்த மண்டபத்தில் நடத்தியதற்காகவும், 27 அடி உயர நடராஜப் பெருமானின் வெண்கலச் சிலையை பாரத மண்டபத்தில் வைத்து ஒவ்வொரு தமிழரையும் பெருமைப்படுத்தியதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
G20 உலக நாடுகள் கலந்து கொண்ட உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, நமது பாரதத்திற்கு ஒரு பெருமைக்குரிய தருணம் ஆகும். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பாரதத்தின் 142 கோடி மக்களின் குரலாக, வசுதேவ குடும்பகம் அல்லது ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற G20 உச்சி மாநாட்டுக்கான கருப்பொருளை முழுமையாக எதிரொலித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஐ.நாவில் உரையாற்றும் போது, நமது பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சொல்லாடலை மேற்கோள் காட்டினார்.
எல்லா ஊரும் நமது ஊரே எல்லா மக்களும் நமது உறவினர்கள் என்ற அந்த வாக்கின்படி, இந்த வருடத்தில், ஜி 20 கூட்டங்களை நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.
பாரதம் முழுவதும், 60 நகரங்களில் 220 கூட்டங்கள், 1,00,000க்கும் அதிகமான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்பு மற்றும் 1.25 கோடி இந்தியர்கள் இந்த மகத்தான முயற்சியில் ஈடுபட்டு, நமது பிரதமர் முழு G20 ஆண்டையும் மக்கள் தலைமையிலான G20 ஆக மாற்றிக் காட்டியுள்ளார்.
இந்த மாபெரும் வெற்றி மூலம், பாரத நாடு, லுடியன்ஸ் டெல்லிக்கு அப்பாற்பட்டது என்பதை நமது பிரதமர் தெளிவாக நிரூபித்துள்ளார். நமது நாட்டின் உயரிய கொள்கைகளான ஜனநாயகம், பன்முகத்தன்மை வாழ்வியல் மற்றும் மேம்பாடு ஆகியவை, நமது G20 ஆண்டை உலகம் முழுவதற்கும் தெளிவாக்கியுள்ளன.
பாரதத்தின் தலைமையின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி. தகுதிமிக்க ஆப்பிரிக்க யூனியனை, நிரந்தர உறுப்பினர் குழுவில் புதியதாகச் சேர்க்க, உலகத் தலைவர்களை வற்புறுத்தியதன் மூலம், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய புதிய உலகத்தின் உருவாக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதிகாரத்தை ஒரு சிறிய குழுவில் மூடி வைத்திருக்க விரும்பும் பெரும்பாலான உலகளாவிய சக்திகளைப் போல் அல்லாமல், ஐ.நா உட்பட உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவசரத் தேவையை இதன் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார் நமது பிரதமர்.
எந்த நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், மானுட குல நலனுக்காகக் குரல் கொடுப்பதில் பாரதப் பிரதமர் மோடியின் தலைமையில் பாரதம் ஒரு விஷ்வகுருவாக விளங்குகிறது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாரதம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ள துறைகளில் சில துறைகளான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, முன்னேறிய தொழில்நுட்ப சேவைகள், பெண்கள் தலைமையிலான மேம்பாடு. தரமான கல்வி, திறன் மேம்பாடு. புதிய தொழில் தொடங்க உகந்த சுற்றுச்சூழல் அமைப்பு, சர்வதேச வர்த்தகத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைப்பது மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றில், G20 உச்சிமாநாடு உலக நாடுகள் மத்தியில் பொதுவான ஒருமித்த கருத்தை எட்டியுள்ளது. உலக அளவில், ஊழலை ஒழித்தல், பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் மற்றும் பணமோசடி, பேரிடர் அபாயத்தைக் குறைத்தல், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும் மிக அச்சுறுத்தலான பிரச்சினைகள் போன்றவற்றிற்கு, குறித்த நேரத்தில், நேர்த்தியான தீர்வு காண G20 உச்சிமாநாடு தீர்மானித்துள்ளது.
நமது பிரதமர், தினை சாகுபடியின் அவசியத்தையும், பாரம்பரிய மாற்று மருத்துவத்தையும் வலியுறுத்தி, அவற்றிற்கு முழு அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் வழங்குவதன் மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, மனிதனை மையமாகக் கொண்ட புதிய அணுகுமுறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இது தற்போதைய நுகர்வு அடிப்படையிலான தனி நபர் வருமானத்தை மையமாகக் கொள்வதில் இருந்து உலகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றத்தைக் குறிக்கிறது.
கடந்த 9 ஆண்டுகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்மாதிரியான தலைமையின் கீழ், பாரதம், உலக நாடுகளின் ‘உண்மையான நண்பனாக மற்றும் நம்பகமான சகோதரனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில் இந்தியர்களாகிய நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் இந்தியாவின் G20 தலைமைத்துவம், உலக நாடுகளைக் கையாள்வதில், நமது நாட்டின் திறமையை முழுமையாக வெளிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், G20 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆப்பிரிக்க ஒன்றியத்தை சேர்த்து, உலகிற்கு, G21 நாடுகளின் குழுவாகத் திரும்ப வழங்கியுள்ளது என்பதை விட சிறப்பு என்ன இருக்க முடியும்?
இந்தப் பெருமைமிகு தருணத்தில், பாரதத்தின் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை, உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க G20 2023 மாநாட்டை பார்த மண்டபத்தில் நடத்தியதற்காகவும், தமிழகத்தின் சுவாமி மலையைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி ராதாகிருஷ்ணன் ஸ்தபதியால் உருவாக்கப்பட்ட 27 அடி உயர நடராஜப் பெருமானின் வெண்கலச் சிலையை பாரத மண்டபத்தில் வைத்து ஒவ்வொரு தமிழரையும் பெருமைப்படுத்தியதற்காகவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.