பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை விளாசி அசத்தியுள்ளது.
ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதியப் போட்டி இன்று ரிசர்வ் டேவில் மீண்டும் தொடங்கியது. 147 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு விராட்கோலி, கே.எல்.ராகுல் ஜோடி அசத்தலான பேட்டிங்கை அளித்தது.
25 ஓவர்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் ஆட்டத்தை இவர்கள் இருவரும் தொடங்கிய நிலையில், வெளிக்களதில் பந்து செல்ல சற்று சிரமமாக இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு வந்த கே.எல்.ராகுல் நிதானமாகவும், ஏதுவான பந்துகளையும் அடித்து ஆடினார்.
அவருக்கு மறுமுனையில் விராட்கோலி நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், ரன் சீரான வேகத்தில் ஏறியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். அவர் அரைசதம் விளாசிய நிலையில் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த விராட்கோலியும் அரைசதம் விளாசினார்.
அரைசதத்திற்கு பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்தியாவின் ரன் ஏறத் தொடங்கியது. இருவரும் அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 45.1 ஓவர்களில் 300 ரன்களை கடந்தது. 300 ரன்களை கடந்த பிறகு இந்தியாவின் ரன் வேகம் இன்னும் அதிகரித்தது. கே.எல்.ராகுல், விராட்கோலி ஜோடி மட்டும் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்குள் வந்த கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 47வது ஓவரின் கடைசி பந்தில் அவர் சதம் விளாசினார். மறுமுனையில் விராட்கோலி துரிதமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். விராட்கோலி இந்த போட்டியில் 99 ரன்களை எட்டியபோது 13 ஆயிரம் ரன்களை எட்டினார். 13 ஆயிரம் ரன்களை எட்டிய அடுத்த பந்திலே ஒரு ரன் எடுத்து விராட்கோலி சதம் அடித்தார். சர்வதேச அரங்கில் விராட்கோலிக்கு இது 47வது சதம் ஆகும்.
சதங்களை கடந்த பிறகு இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்தியாவின் ரன் வேகமாக ஏறுத்தியது. கடைசி ஓவரில் பஹீம் நோ பால் வீச அடுத்தடுத்து பவுண்டரியை விராட்கோலி விளாசியதால் இந்தியா 350 ரன்களை கடந்தது. கடைசி பந்தையும் விராட்கோலி சிக்ஸருக்கு விளாசினார். இதனால், இந்திய அணி 356 ரன்களை விளாசியது.