இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, உலகத் தலைவர்களும், ஊடகங்களும் புகழாரம் சூட்டி வருகின்றன.
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. “வசுதைவ குடும்பகம்” என்கிற அடிப்படையில் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த மாநாட்டை இந்தியா நடத்தியது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்வைத்து கட்டமைக்கப்பட்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான இம்மாநாடு மிகச்சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடந்து முடிந்திருப்பதாக உலகத் தலைவர்களும், ஊடகங்களும் புகழாரம் சூட்டி வருகின்றன. இம்மாநாடு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பருவநிலை பிரச்சனைகள், போர் உள்ளிட்டவற்றால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், முக்கியப் பிரச்சனைகளுக்கு ஜி-20 அமைப்பால் தீர்வு அளிக்க முடியும் என்று இந்த மாநாடு நிரூபித்துள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது எக்ஸ் பக்கத்தில், “வரலாற்றுப்பூர்வமான ஜி-20 மாநாடு மற்றும் சிறப்பான வரவேற்புக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி. சர்வதேச உணவுப் பாதுகாப்பு முதல் ஒத்துழைப்புகள் வரை இது ஒரு வெற்றிகரமான மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது” என்று பாராட்டி இருக்கிறார்.
ரஷ்யா சார்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பல வழிகளில் இது ஒரு திருப்புமுனை மாநாடு. இது பல பிரச்சனைகளில் முன்னோக்கிச் செல்ல நமக்கு ஒரு வழியை வழங்குகிறது. ஜி20 அமைப்பை அரசியலாக்கும் முயற்சிகளை தடுத்ததற்காக இந்தியாவுக்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகையில், “உலகின் அனைத்து நாடுகளும் பயனடையும் வகையில் ஜி20 மாநாட்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சவூதி அரேபியாவின் எதிர்கால நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம்” என்று கூறியிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நமது எதிரி நாடாகக் கருதப்படும் சீனகூட, ஜி20 மாநாட்டுக்காக இந்தியாவை புகழ்ந்து தள்ளி இருக்கிறது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “ஜி20 உறுப்பு நாடுகள் அனைத்தும் டெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது சாதகமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. வளரும் நாடுகளின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒருமித்த முடிவுகளை அடைய வேண்டும் என்பதிலும் சீனா எப்போதும் ஆதரவை அளித்தே வருகிறது” என்று கூறியிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, பொதுவாக சர்வதேச மாநாடுகளில் அமெரிக்க அதிபரே ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைவிட பாரதப் பிரதமர் மோடியே ஆதிக்கம் செலுத்தினார் என்றால் மிகையாகாது. இதன் மூலம் இந்தியாவின் மதிப்பு பலமடங்கு உயர்ந்திருக்கிறது.