பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவுடன் தானாக இணையும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் பா.ஜ.க.வின் பரிவர்த்தன் சங்கல்ப் யாத்திரையை மத்திய அமைச்சர் வி.கே.சிங் தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம், இந்தியாவுடனான எல்லைக் கதவைத் திறக்கக் கோரி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஷியா முஸ்லீம்கள் கோரிக்கை விடுத்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங், “கொஞ்சம் பொறுத்திருங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே இந்தியாவுடன் இணையும்” என்றார். தொடர்ந்து பேசிய வி.கே.சிங், “இந்தியா தலைமையின் கீழ் சமீபத்தில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்றதொரு உச்சி மாநாட்டை வேறு எந்த நாடும் நடத்தியது கிடையாது.
உச்சி மாநாட்டின் பிரம்மாண்டம் உலக அரங்கில் இந்தியாவுக்கு தனித்துவமான அடையாளத்தை அளித்திருக்கிறது. இதன் மூலம் இந்தியா தனது திறமையை உலக அரங்கில் நிரூபித்திருக்கிறது. ஜி20 அமைப்பில் உலகின் அனைத்து சக்தி வாய்ந்த நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.
ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஆகவே, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே, பரிவரித்தன் சங்கல்ப் யாத்திரையை தொடங்கி இருக்கிறோம். இந்த யாத்திரையில் மக்களை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டறிந்து வருகிறோம்.
இந்த யாத்திரைக்கு மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, தேர்தலுக்கு முன்பாக மாநிலத்தின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. பிரதமரை முன்னிறுத்தித்தான் தேர்தலை சந்திக்கிறது. எனினும், பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற, நல்ல தலைவர்களுக்கு கட்சி வாய்ப்பளிக்கும்” என்றார்.