இந்தியாவின் ஜி20 தலைமை உலக அரங்கில் அழியாத முத்திரையை பதித்திருக்கிறது. டெல்லி பிரகடனத்தில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்து உலகளாவிய நம்பிக்கை குறைபாடுகளை கலைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி இருக்கிறார்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது எக்ஸ் பதிவில், “டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்தியா ஜி20 தலைமை உலக அரங்கில் அழியாத முத்திரையை பதித்திருக்கிறது. பாரதத்தின் பராக்கிரமம், ‘விஸ்வ குரு’ (உலகிற்கே ஆசான்), ‘விஸ்வ பந்து’ (உலகின் தோழன்) ஆகிய இரண்டையும் வெற்றிகரமாக நிரூபித்திருக்கிறது.
ஜி20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனத்தில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்து, உலகளாவிய நம்பிக்கைக் குறைபாடுகளை குறைப்பதற்கும், உலகளாவிய நம்பிக்கையை வளர்ப்பதற்கும் ஒரு வரலாற்று மைல்கல்லை ஏற்படுத்தி இருக்கிறது. ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய அம்சமாக, இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த உத்தி, அரேபிய தீபகற்பம் மற்றும் ஐரோப்பாவுடான ஈடுபாட்டை மேம்படுத்தும். இந்தியாவுக்கும் அரேபியாவுக்கும் இடையே நீண்டகால இணைப்பை ஏற்படுத்த இந்த முயற்சி இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர்த்தது பிரதமர் மோடியின் ‘தெற்குலக நாடுகள்’ முயற்சிக்கான சாதனையாகும். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பிரதமரின் அணுகுமுறை பாரதத்தின் ஜி20 தலைமை பதவியை உண்மையாக வரையறுத்துள்ளது. பிரதமர் மோடியின் முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்கு பார்வைக்காக நான் அவரை வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.