இந்தியர்கள் உலகளவில் கடுமையான உழைப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றில் சிறந்தவர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள்.
அந்த வகையில், அடோப் (Adobe) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் (Shantanu Narayen) குறித்துப் பார்ப்போம்.
சாந்தனு நாராயண் 1963-ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வந்தார். தாயார் பேராசிரியராக பணியாற்றினார்.
சாந்தனு, ஐதராபாத்தில் உள்ள உஸ்மானிய(Osmania) பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும், அமெரிக்காவில் பவுலிங் கிரீன் (Bowling Green) மாநில பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர், பெர்க்லியின்(Barkeley) கலிபோர்னியா (California) பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியல் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
இவர் 1986-ஆம் ஆண்டு மீசெரெக்ஸ் ஆட்டோமேஷன் சிஸ்டம்ஸ் (Measurex Automation Systems) என்ற சிலிக்கான் வேலி ஸ்டார்ப்-அப் (Silicon Valley start-up) நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர், ஆப்பிள் நிறுவனத்தில் மூத்த நிர்வாக பதவிகளில் இருந்தார். இதற்கு பிறகு, சிலிக்கான் கிராபிக்ஸ் நிறுவனத்திற்கான டெஸ்க்டாப் (desktop) மற்றும் ஒத்துழைப்பு தயாரிப்புகளின் இயக்குநராக பணியாற்றினார்.
இதைத்தொடர்ந்து, 1998-ஆம் ஆண்டில் அடோப்பில் உலகளாவிய தயாரிப்பு வளர்ச்சியின் மூத்த துணைத் தலைவராக சேர்ந்தார். பின்னர், 2001-ஆம் உலகளாவிய தயாரிப்புகளின் நிர்வாக துணைத் தலைவராக இருந்த அவர், 2005-ஆம் ஆண்டு அடோப்பின் தலைவராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.
சாந்தனு நாராயண் தன் உழைப்பால் படிப்படியாக வளர்ந்து, 2007-ஆம் ஆண்டில் அடோப் (Adobe) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்தார்.
இதற்கிடையே, 2011-ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த பராக் ஒபாமா (Barack Obama) இவரை தனது மேலாண்மை ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமித்தார்.
இவருக்கு, இந்திய அரசாங்கம் 2019-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.