இந்திய அணியின் கேப்டனும், துவக்க வீரரும் ஆன ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து பெரும் சாதனை படைத்தார்.
இதுவரை 14 வீரர்களே இந்த மைல்கல்லை எட்டி இருந்த நிலையில் 15வது வீரராக ரோஹித் சர்மா 10,000 ரன்களை கடந்து இருக்கிறார். அதிலும் அவரது பேட்டிங் சராசரியும் அந்தப் பட்டியலில் மற்ற 12 வீரர்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் தான் ரோஹித் சர்மா இந்த மைல்கல்லை எட்டினார். இந்த போட்டியில் ரோஹித் துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 17 ரன்கள் எடுத்து இருந்த போது ஒரு சிக்ஸ் அடித்து 10,000 ரன்களை கடந்தார்.
ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் விராட் கோலி 57.62 சராசரியுடனும், தோனி 50.57 சராசரியுடனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். ரோஹித் சர்மா அவர்களை அடுத்து மூன்றாவது இடத்தில் 49.02 என்ற சராசரியுடன் இருக்கிறார்.
டெண்டுல்கர், சங்ககாரா, ரிக்கி பாண்டிங், காலிஸ், கங்குலி, ஜெயவர்தனே, ஜெயசூர்யா, டிராவிட், இன்சமாம் உல் ஹக் என மற்ற ஜாம்பவான்கள் அனைவரும் அதைவிட குறைவான பேட்டிங் சராசரியை தான் வைத்துள்ளனர்.
மேலும், விரைவாக 10,000 ரன்களை கடந்த வீரர்கள் வரிசையில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார் ரோஹித் சர்மா. விராட் கோலி 205 இன்னிங்க்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், ரோஹித் சர்மா 241 இன்னிங்க்ஸ்களில் இதை எட்டி இருக்கிறார். மூன்றாம் இடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்க்ஸ்களில் இந்த சாதனையை எட்டி இருக்கிறார்.
மேலும், ஆசிய கோப்பை போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோஹித் நிகழ்த்தி இருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இரண்டு சிக்ஸர் அடித்த ரோஹித், ஆசிய கோப்பை போட்டிகளில் 28 சிக்ஸர் அடித்து இருக்கிறார். அவருக்கு அடுத்து ஷாஹித் அப்ரிடி 26, சனத் ஜெயசூர்யா 23, சுரேஷ் ரெய்னா 18 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.